ஏ. எம். ராஜா

ஏ. எம். ராஜா{Aemala Manmatharaju Rajah}

                                                                                           ஏ. எம். ராஜா
பிறப்பு ஜூலை 1, 1929
சித்தூர் மாவட்டம், ஆந்திரா, இந்தியா
இறப்பு ஏப்ரல் 7 1989 (அகவை 59)
இசை வகை(கள்) கருநாடக இசை
தொழில்(கள்) திரைப்பட பின்னணிப் பாடகர்
இசைத்துறையில் 1950கள் முதல் 1989 வரை

தென்னிந்தியாவின் பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர். 1950களில் இருந்து 1970கள் வரை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பல படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது மனைவி பிரபலப் பாடகி ஜிக்கி.

வாழ்க்கைக் குறிப்பு:

ராஜா ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ராமச்சந்திரபுரத்தில் மன்மதராஜு, லட்சமம்மா ஆகியோருக்குப் பிறந்தார். மூன்று வயதில் தந்தையை இழந்த ராஜாவின் குடும்பம் ரேணுகாபுரத்துக்குச் சென்று குடியேறியது. அங்கேயே உயர்நிலைப்பள்ளிவரை படித்த ராஜா கல்லூரிப்படிப்புக்காக சென்னைக்கு வந்தார். 1951ல் பச்சையப்பா கல்லுரியில் பிஏ (இளங்கலை) முடித்தார்.

திரையிசைப் பாடகராக:

இசையார்வம் கொண்ட ஏ.எம். ராஜா கர்னாடக இசையிலும் மேற்கத்திய இசையிலும் தேர்ந்த பயிற்சி பெற்றிருந்தார் கல்லூரியிலேயே புகழ்பெற்ற பாடகராக விளங்கி பல போட்டிகளில் வென்றார். அவரை அடையாளம் கண்ட எச்.எம்.வி நிறுவனம் இரண்டு தெலுங்கு மெல்லிசைப் பாடல்களைப் பாடுவதற்காக தேர்வு செய்தது. ராஜாவே எழுதி இசையமைத்த பாடல்கள் அவை. அவற்றின் கருவியிசைப் பகுதிகளை நடத்தி பதிவுசெய்ய இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் அவருக்கு உதவினார். இப்பாடல்கள் அகில இந்திய வானொலியில் புகழ்பெற்றன. ஒருநாள் பின்னிரவில் அவற்றைக் கேட்க நேர்ந்த ஜெமினி எஸ். எஸ். வாசன் கவரப்பட்டு தன்னுடைய பலமொழிப்படமான சம்சாரம் திரைப்படத்தில் தலைப்புப் பாடலைப் பாடும்படி அழைத்தார். சம்சாரம் பெரும் வெற்றி பெற்று பின்பு இந்தியிலும் எடுக்கப்பட்டது. எல்லா மொழியிலும் அப்பாடலை அவரே பாடினார்.
1951 இல் கே.வி. மகாதேவன் ஏ.எம்.ராஜாவை அவரது குமாரி என்ற படத்தில் அழியாத காதல் வாழ்வில்… என்ற பாடலை பாடும்படி அழைத்தார். அன்றுவரை கருநாடக இசையின் பாணியில் பாடப்பட்ட திரைப்பாடல்களைக் கேட்டுப்பழகிய தென்னிந்திய இசை ரசிகர்களுக்கு ராஜா ஒரு புதிய சுவையை அளித்தார். வட இந்திய திரைப்பாடல்கள் மற்றும் கஸல் பாடல்களிலிருந்து அவரே தனக்கென உருவாக்கிக் கொண்ட பாணி அது. இந்தி பாடகர்களான மொகம்மத் ராபி மற்றும் தலத் மெக்மூத் ஆகியோர் பாடும் முறைமைகளின் பல சிறப்பம்சங்களை எடுத்துக்கொண்டு அவர்களை ஒற்றியெடுத்தாற்போலப் பாடாது தனக்கே உரித்தான பாணியை உருவாக்கியவர் ஏ.எம்.ராஜா.
துயரத்தையும் தாபத்தையும் தேக்கிய பாடல்களே ஏ.எம்.ராஜாவை தமிழில் நீங்காப் புகழ்பெறச்செய்தன. சிற்பி செதுக்காத பொற்சிலையே, தென்றல் உறங்கிய போதும் போன்றவை சில எடுத்துக்காட்டுகள். மேலை இசையின் சாயல்கொண்ட துள்ளலான ஆடாத மனமும் ஆடுதே, பாட்டுப் பாடவா பார்த்துப் பேச வா, ஓகோ எந்தன் பேபி போன்ற பாடல்களிலும்கூட ஒரு இனிமையான மென்மையைச் சேர்ப்பது அவரது குரல். மைனர் லைஃப் ரொம்ப ஜாலி போன்ற பாடல்களையும் அவர் தன் பாணியில் பாடியுள்ளார். முறையான கர்நாடக இசைப்பயிற்சி உள்ளவரென்பதனால் ஏ.எம்.ராஜா மரபானமுறையில் கர்நாடக ராகங்களுக்குள் அமைக்கப்பட்ட பாடல்களைக்கூட எந்தவிதமான முயற்சியும் தெரியாமல் சுருதித் தெளிவுடன் இயல்பாக பாடியுள்ளார். மீண்ட சொர்க்கம் படத்தில் வரும் கலையே என் வாழ்க்கையின் வாகீச்வரி ராகத்தில் அமைந்த பாடல். தேன்நிலவு படத்தில் வரும் காலையும் நீயே ஹம்சத்வனி ராகத்தில் அமைந்தது.
அதே இயல்புமாறாத துல்லியத்துடன் வேகமான தாளம் கொண்ட வாடிக்கை மறந்ததும் ஏனோ கண்மூடும் வேளையிலும் போன்ற பாடல்களையும் அவர் பாடியிருக்கிறார். மெல்லிய நடை கொண்ட நிலவும் மலரும் இதய வானின் உதய நிலவே கண்ணாலே நான் கண்ட கணமே போன்றவை அவரது குரலின் அழகை முழுக்க காட்டி நம் இழந்த வாழ்க்கையின் இனியதுயரங்களை தொட்டு மீட்டுபவை. தன் உணர்ச்சிகளை மென்மையாக பாடல்களில் ஏற்றுவதன் மூலம் ஏ.எம்.ராஜா மெட்டுக்கு அப்பால் சென்று பாடல்களுக்கு அளிக்கும் ஒரு தனித்துவம் உண்டு. மாசிலா உண்மைக்காதலே (அலிபாபாவும் 40 திருடர்களும்)கண்களின் வார்த்தைகள் புரியாதோ (களத்தூர் கண்ணம்மா) போன்ற பாடல்களை உதாரணமாகக் காட்டலாம்.

ஐம்பது அறுபதுகளில் புகழின் உச்சியில் இருந்த நாட்களில் ஏ.எம்.ராஜா எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், என். டி. ராமராவ், ஏ. நாகேஸ்வரராவ், ஜெமினி கணேசன், சத்யன் பிரேம்நசீர் போன்ற பெரிய நட்சத்திரங்களுக்காக தொடர்ந்து பாடினார். பொதுவாக இளம் காதல் நாயகர்களான ஜெமினிகணேசன், பிரேம்நசீர் போன்றவர்களுக்கு அவரது குரல் பெரிதும் பொருந்தியது. பி.பி.ஸ்ரீனிவாஸ் அறிமுகமாகி, ஜெமினி கணேசனுக்காகப் பாடத்துவங்கும் வரையிலும், ஜெமினியின் பாடற்குரலாகவே விளங்கியவர் ஏ.எம்.ராஜா. ஜெமினி கணேசனுக்காக அவர் பாடிய படங்களில், கல்யாணப்பரிசு, மிஸ்ஸியம்மா, மனம் போல மாங்கல்யம், பூலோக ரம்பை, ஆடிப்பெருக்கு ஆகியவை இறவா வரம் பெற்றவை.

நடிகராக:

ஏ.எம்.ராஜா சில படங்களில் நடித்தும் இருக்கிறார். நாகேஸ்வர ராவ் நடித்து இருமொழிகளில் பெருவெற்றி பெற்ற தேவதாஸ் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அவர் வந்தார். பின்னர் இசைக்கலைஞனைப்பற்றிய படமான ‘பக்க இந்தி அம்மாயி’ படத்தில் முதன்மை வேடத்தில் நடித்தார். அந்தப்படம் இந்தியில் பாடோசான் என்றபேரில் மறுவாக்கம் செய்யப்பட்டபோது அதில் கிஷோர் குமார் அந்த பாத்திரத்தில் பாடி நடித்தார். அந்தப்படம் சிலகாலம் கழித்து மீண்டும் ‘பக்க இந்தி அம்மாயி’ என்ற பேரிலேயே தெலுங்கில் எடுக்கப்பட்டபோது ஏ.எம்.ராஜா நடித்த பாத்திரத்தில் எஸ். பி. பாலசுப்ரமணியம் நடித்தார்.
1955ல் மகேஸ்வரி என்ற படத்தின் அழகு நிலவின் பாவனையிலே என்ற பாடலின் ஒத்திகையின்போது ஏ.எம்.ராஜா பாடகி ஜிக்கியிடம் தன் காதலை தெரிவித்தார். அது திருமணத்தில் முடிந்தது. ஜிக்கி ஏ.எம்.ராஜா தம்பதிக்கு ஆறு குழந்தைகள். அவர்களில் சந்திரசேகர் ஓரளவு தந்தையின் குரலையும் இசைத்திறனையும் கொண்டவர்.
ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியும் தான் பம்பாய்க்குச் சென்று இந்திப்படத்துக்காக பாடிய முதல் தென்னிந்தியப்பாடகர்கள். சங்கர் ஜெய்கிஷன் இசையில் ராஜ்கபூரின் ‘ன்’ படத்துக்காக. இதேபடத்தின் தெலுங்கு தமிழ் வடிவங்களுக்கான பாடல்களையும் அவர்கள் இருவரும்தான் பாடினர். பகுத் தின் ஹயே போன்ற படங்களுக்கும் அவர்கள் பாடினர். ராஜாவின் பாடும் முறையில் இருந்த ஒரு பொது இந்திய இயல்புக்கு இது சான்றாகும். கன்னடத்தில் அதி மதுர அனுராகா போன்ற புகழ்பெற்ற பாடல்களை ஏ.எம்.ராஜா பாடினார். சிங்களப் படத்தில்கூட அவர் பாடியிருகிறார்.

இசையமைப்பாளராக:

இசையமைப்பாளராக அவரது முதல் படம் தெலுங்கில் 1958ல் வந்த “சோபா”. அது ஒரு பெரும் வெற்றிப்படம். 1960ல் வெளிவந்த பெல்லி காணுகா அவரை தெலுங்கின் நட்சத்திர இசையமைப்பாளராக ஆக்கியது. 1959ல் வந்த கல்யாணப்பரிசு இயக்குநர் ஸ்ரீதரின் முதல் படம். அக்காலத்து மாபெரும் வெற்றிப்படங்களில் ஒன்று அது. தமிழில் இசையமைப்பாளராக ஏ.எம்.ராஜாவுக்கும் அதுவே முதல் படம்.

ஸ்ரீதரின் இயக்குனத் திறமைக்காக மட்டுமன்றி பாடல்களுக்காகவும் மிக்க புகழ் பெற்றிருந்த படம் இது. “வாடிக்கை மறந்தது ஏனோ” போன்ற காதல் பாடல்கள் “காதலிலே தோல்வியுற்றாள்” போன்ற துயரப்பாடல்கள் இன்றளவும் ரசிக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, தேன் நிலவு, விடி வெள்ளி போன்ற ஸ்ரீதரின் படங்களுக்கும் ஆடிப் பெருக்கு போன்ற பல வேறு படங்களுக்கும் இசை அமைத்தார்.

ஏ.எம்.ராஜா ஒரு முழுமையான இசைக்கலைஞர். தென்னிந்திய இசையின் ஒரே வெற்றிகரமான ‘இசையமைப்பாளர்-பாடகர்’களில் முதன்மையானவர். ஏ.எம்.ராஜா இசையமைத்த பெரும்பாலான பாடல்கள் தூய இன்னிசைமெட்டு கொண்டவை, ஆனால் அவையெல்லாம் பெரும்புகழ் பெற்று அவரை வெற்றிகரமான இசையமைப்பாளராக நிலைநிறுத்தின. உதாரணமாக ஆடிப்பெருக்கு என்ற படத்தில் பி. சுசீலா பாடிய ‘காவேரி ஓரம் கவிசொன்ன காதல்..’ என்ற பாடல். சுசீலாவின் உச்சத்திற்குபோகும் திறனுக்குப் பதிலாக ஆழத்திற்குச் (base) செல்லும் திறனை வெளிப்படுத்தும் இப்பாடலின் மெட்டு எத்தனை நுட்பமான திருப்பங்களும் வளைவுகளும் கொண்டு இறுதியில் உச்சத்துக்கு சென்று உலவுகிறது என்பதை கவனித்தால் இத்தகைய மெட்டை எளிதாக நம்மைக் கவரும் ஒரு பாடலாக அமைத்து, அதன் மெட்டுக்கும் பின்னணி இசைக்கும் இடையே துல்லியமான ஒருமையை உருவாக்கியுள்ள ஏ.எம்.ராஜா எத்தனை திறன் வாய்ந்த இசையமைப்பாளர் என்பது புரியும்.

வேறு மொழிகளில்:

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று தென்மொழிகளிலும் உச்சப்புகழுடன் இருந்த பாடகர் ஏ.எம்.ராஜா மட்டுமே. 1952ல் தட்சணாமூர்த்தியின் இசையமைப்பில் ‘லோகநீதி’ என்ற படம் வழியாக மலையாளத்தில் ஏ.எம்.ராஜா நுழைந்தார். அவர் தெலுங்கராக இருந்ததால் சில மலையாளச்சொற்களை உச்சரிப்பதில் குளறுபடி இருந்தது. ஆனாலும் மலையாளிகள் அவரை தங்கள் சொந்தப்பாடகராக ஏற்றுக் கொண்டனர். கேரளத்தின் முதல் ‘சூப்பர் ஸ்டாரா’ன சத்யனின் குரலாக புகழ்பெற்ற ஏ.எம்.ராஜா அறுபதுகளில் கிட்டத்தட்ட ஒரு நட்சத்திரப் பாடகராகவே விளங்கினார். .
ராஜாவின் பல முக்கியமான பாடல்களுக்கு தேவராஜன் இசையமைத்தார். ராஜா பாடிய பெரியாறே பெரியாறே போன்றபாடல்கள் தமிழ்நாட்டிலும் அக்காலத்தில் புகழ்பெற்றிருந்தன. பொதுவாக எவரையும் புகழ்ந்து சொல்லாதவரும் குறைவாகப் பேசுபவருமான தேவராஜன் ராஜாவின் குரலின் இனிமையையும் சுருதி சுத்தத்தையும் மட்டுமில்லாது அவரது இனிய குணத்தையும், அர்ப்பணிப்பையும் புகழ்ந்து சொல்லியிருக்கிறார். வடக்கு கேரளத்தின் காதல்பாட்டுகளான ‘மாப்பிளைப்பாட்டு’களின் சாயலில் அமைந்த பல பாடல்களை ராஜா பாடியிருக்கும் விதம் அந்தப் பண்பாட்டின் சாரத்தையே வெளிப்படுத்துவதாக அமைந்து இன்றும் மலையாளிகளின் நெஞ்சங்களில் வாழ்கிறது. உதாரணமாக ‘உம்மா’ படத்தில் வரும் ‘பாலாணு தேனாணு ‘ என்றபாடலில் என் சைனபா ! என்ற அழைப்பில் ராஜா தன் குரல்மூலம் அளிக்கும் உணர்ச்சிகரமான நெகிழ்வு அதை மறக்கமுடியாத காதல்பாடலாக ஆக்குகிறது. கேரளத்தின் என்றும் அழியாத இசைப்பாடல்களில் பல ஏ.எம்.ராஜாவின் குரலில் ஒலிப்பவையே. காச கங்கையுடெ கரையில்.. போன்றபாடல்களை மலையால திரையிசையின் ‘கிளாசிக்’குகளாகவே சொல்லலாம்.
தெலுங்கில் ஏ.எம்.ராஜாவின் பெரும்பாலான பாடல்கள் சரித்திரம் படைத்த வெற்றிகள். 1959ல் அப்பு சேஸி பாப்பு கோடு படத்தில் இடம்பெற்ற ‘மூகாவைனா எமி லே’ [தமிழில் ‘போதும் இந்த ஜாலமே’ ]இன்றும் ஆந்திராவில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல். 1954 ‘விப்ரநாராயணா’ படத்தில் இடம்பெற்ற ‘சூடுமடே செலியா’ ‘பாலிஞ்சர ரங்கா’, 1957ல் அக்கா செல்லுலு படத்தில் இடம்பெற்ற அந்து மாமிடி போன்றபாடல்களை தெலுங்கு திரையிசை மறக்கவேயில்லை. தமிழில் நீங்காப் புகழ்பெற்ற ‘மாசிலா உண்மைக்காதலே’ தெலுங்கில் வந்த ‘பிரியதமா மனசு மரேனா’ என்ற பாடத்தான். [அலிபாபா 40 தொங்கலு]. அலாதீன் அற்புத தீபம் படத்தில் இடம்பெற்ற ‘அண்டால கொனெட்டிலோனா’ [1957] ‘அமர சந்தேசம் ‘படத்தில் இடம்பெற்ற ‘ஏதோ நவீன பாவம்’ என அவரது அழியாப்பாடல்களின் பட்டியலை பெரிதும் நீட்டமுடியும்.

பிற்காலம்:

நடுவே திரைவாழ்க்கையில் ஏ.எம்.ராஜாவுக்கு ஓர் இடைவெளி விழுந்தது. தன் மெல்லிசைக்கச்சேரிகள் வழியாக அவர் வாழ்க்கையை நடத்தினார். பல வருடங்கள் கழித்து எழுபதுகளின் தொடக்கத்தில் இசையமைபபளர் வி. குமார் ஏ.எம்.ராஜாவை அவரே அமைத்துக்கொண்ட அஞ்ஞாதவாசத்திலிருந்து மீட்டு பாடவைத்தார். ரங்கராட்டினம் படத்துக்காக ஏ.எம்.ராஜா பாடிய முத்தாரமே உன் ஊடல் என்னவோ? அன்று மிகப்பெரிய ஒருஅலையாக நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டது. புகுந்தவீடு படத்துக்காக ராஜா பாடிய செந்தாமரையே செந்தேனிதழே… அடுத்த அலை. இரு பாடல்களுமே சங்கர் கணேஷ் இசையமைத்தவை. 1973ல் வீட்டுமாப்பிள்ளை படத்தின் வழியாக இசையமைப்பாளராகவும் ஏ.எம்.ராஜா மறுவருகை புரிந்தார். அதில் வந்த ராசி நல்ல ராசி ஒரு வெற்றிப்பாடல். 1975ல் ‘எனக்கொரு மகன் பிறப்பான்’ படத்திற்காகவும் ஏ.எம்.ராஜா இசையமைத்தார். இக்காலகட்டத்தில் ‘தாய்க்கு ஒரு பிள்ளை’, ‘வீட்டுக்கு வந்த மருமகள்’, ‘பத்துமாத பந்தம்’, ‘அன்பு ரோஜா’, ‘இது இவர்களின் கதை’ போன்ற பல படங்களுக்காக தொடர்ந்து பாடினார். 1970ல் ஏ.எம்.ராஜா மலையாளத்தில் ‘அம்ம எந்ந ஸ்திரீ’ படத்திற்கு இசையமைத்தார். ஜிக்கியும் எழுபதுகளில் ஒரு மீள்வரவை நிகழ்த்தினார். 1970ல் ‘காதலெனும் காவியம்’ முதல் 1993 ல் இளையராஜா- விஸ்வநாதன் இசையில் ‘செந்தமிழ்பாட்டு’ படத்தில் ‘வண்னவண்ண மெட்டெடுத்து’ வரை அந்த பயணம் நீண்டது.

மறைவு:

ஏ.எம்.ராஜா தன் கடைசிநாள்வரை பாடகராக இயங்கிக்கொண்டுதான் இருந்தார். 1989, ஏப்ரல் 7 ஆம் நாள் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டாலுமூடு என்ற ஊரில் உள்ள பகவதி கோயிலில் இசைநிகழ்ச்சி முடிந்து தன் குழுவினருடன் தொடருந்தில் திரும்பிக் கொண்டிருந்தார். உதவியாளனாக வந்த ஒரு புதிய பையன் தொடருந்தைத் தவறவிட்டு விட்டான் என்று எண்ணி கவலைகொண்டு நாகர்கோயில் – நெல்லை நடுவே வள்ளியூர் என்ற ஊரில் புகையிரத நிலையத்தில் இறங்கி தேடினார். ரயில் புறப்படவே ஓடிவந்து ஏறமுயன்றவர் கால்தவறி ரயிலின் அடியில் விழுந்து நசுங்கி உருக்குலைந்து இறந்தார்.

காலத்தை கடந்தவை:

SL/NO SONGS MOVIE DOWNLOAD
01 Paatu paadavaa Thein nilavu
DOWNLOAD
02 Unnai kandu naan- Kalyana
DOWNLOAD
03 Ullathilay- Vijayapuri veeran
DOWNLOAD
04 Thulliyae odumae- Vanjam
DOWNLOAD
05 Minnal pol aagum- Avan
DOWNLOAD
06 Minor liff pomba- Illaramae nallaram
DOWNLOAD
07 Pazhga theriya- Missiamma
DOWNLOAD
08 Mudiyum endral- Missiamma
DOWNLOAD
09 Enullam than- Veetukku vandha varalaxmi
DOWNLOAD
10 Pothum undan- Kadan vaangi kalynam
DOWNLOAD
11 Veenil yeno vethanai- Balae raman
DOWNLOAD
12 Pattathaarigal- Pakaa thirudan
DOWNLOAD
13 Seitha paavathinilae- Genova
DOWNLOAD
14 Sirpi sethukaatha- Ethirpaarathathu
DOWNLOAD
15 Yogamadhae- Vippira vippra narayanan
DOWNLOAD
16 Manilathil vithiyai- Samsaram
DOWNLOAD
17 Theriyuma- Paasama nesama
DOWNLOAD
18 Kalaiyae un vizhi- Guna sundari
DOWNLOAD
19 Enakku onnum puriyavillai- Anbu
DOWNLOAD
20 Arugil vanthaal- Kalathoor kannamma
DOWNLOAD
21 Vazhkai enbathu- Kathavai thattiya moginipei
DOWNLOAD
22 Thanimayiley- Adiperukku
DOWNLOAD
23 Kalaiyae yen- Meenda sorgam
DOWNLOAD
24 Ayyamudalai vaanga- Anbu
DOWNLOAD
This entry was posted in தேமதுரத் தமிழ் இசை. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s